Tuesday, August 13, 2013

எவளோ ஒருத்தி!

அவ, யாரோ எவளோ ஒருத்தி
துடுக்கானப் பேச்சுக்காரி
பாக்கத் துரு துருன்னு
வண்டாட்டம் வளம் வருவா....
யேன் பேச்சுப் பழக்கமெல்லாம்
அச்சு அசப்பாக அவ தோழன்
போலிருக்குன்னு சொல்லி சிரிச்சு நின்னா..

பேச்சு அவ பேச்சு
நிக்காத காத்தாட்டம்...
சுடு காபி கையில் கொட்டி
சுட்ட கதை சொல்லி வைச்சா..
அவ பூனை மீசை முடி
நான் காட்ட கோவிச்சா...
கிண்டலாப் பேசி நான் 
வீணா வம்பிழுக்க, வந்த 
சிரிப்படக்கி உள்ளார வச்சுக்கிட்டு
மொறச்சா முழியிரண்டும் 
முட்டையா மாத்திப்புட்டு...
பொழப்பு கஷ்டமுன்னு
சொனங்கி நிக்கையிலே
தேத்தி அனுப்பி வச்சேன்
மனசார அவ சிரிச்சா..
பொழுதெல்லாம் பேசித் தீத்து 
ராப்போது ஆன போதும்
நில்லாம பேசிப் பேசி
யேன் தூக்கம் தள்ளி வச்சா...
நான் பேசாத நேரம் எல்லாம்
தனிமைனு மொகஞ்சுழிச்சா...

நட்பு முத்தி அந்த 
பழக்கத்தில் பல நாளு
அவ துயரம் நான் தொடச்சேன்
கண்ணீரு அத சேத்தி...
முகம் மட்டும் சிரிச்சவள
உண்மயா சிரிக்க வச்சேன்..
நட்பு உண்மையினு
அம்புட்டு நம்பி வச்சேன்...
கரை சேத்த தோணி அதை
கரையோட விட்டுப்புட்டா..
புயக்காத்து அடிக்கையில
ஆத்தோட போக விட்டா..
.
காத்து நிக்க வில்ல அவ
பேச்சு நின்னு போச்சு....
கடல் நீரு வத்தவில்ல
அவ பாசம் வத்திப்போச்சு
எல்லாம் முடிஞ்சிருக்க
எனக்குள்ள நான் பாத்தேன்...
முகம் பாக்கும் கண்ணாடிய
கழட்டி வச்ச வெறுஞ் சுவரா
உசிர் போயி அழிஞ்சிருக்கு
வெறுங்கூடா எம்மனசு...

கூடாக்கி விட்டவள,
முன்னிற்க நான் பாத்தேன்...
அடையாளம் தெரியவில்ல...
அவ, யாரோ எவளோ ஒருத்தி!!!

No comments: