Tuesday, August 13, 2013

பின்னிரவு...

நித்திரை உலகில் துயரின்றி களித்திருக்க,
ஏதோ ஒரு REM சுழற்சிக் கனவொன்றின்
எதிர் பாரா எல்லை விளிம்பில்
விழ விரும்பாத அவ்வுலக முயற்பொந்தில்
சருக்கி விழுந்து இவ்வுலகம் வந்தடைந்த நான்,
படுக்கையில் படுத்தபடி, உருண்டு புரண்டு.. 
கண் மூடி கண் திறந்து,
போர்வையின் இடுக்கறியும் சில
கொசுக்களின் விளையாட்டுக்கு கைகொட்டி, 
யாரும் அகவலிடாது குறுந்தகவலிடாது
கண்மூடி அயர்ந்திருக்கும் என் அலைப்பேசியை அலசி
அந்த அடர்ந்த இருளில் கனத்த தனிமையில்
போர்த்தொடுத்துத் தோற்றுக்கொண்டிருந்தேன்
உறங்க விடாத அப்பின்னிரவோடும்
சில நிகழ்வுகளோடும்...

ஏன் அப்படி...இப்படி ஏனில்லை...
அவன் அவள் அவர் அவர்கள் நான்
அப்படி செய்ததேன் இப்படி ஏனில்லை
என் பிழையா... பிழை பெரிதா...
திருத்திக்கொள்ள முடியுமா தேவையா
என அடிமேல் அடி வைத்து சலனித்திருந்தேன்
மனதிலும்.. என் வீட்டு அறையிலும்...

முடிவு தென்படாத
அப்”பென்ரோஸ்” படியேற்றப் போரில்,
வெள்ளைக் கொடிகாட்டி
சற்று நிறுத்தம் செய்த,
சிறு சாளர துவாரமொன்றில்,
திரெளபதி சேலையாய்,
ஒளி கக்கி மிதந்திருக்கும் முழு மதியை,
ஒரே வானிலிருந்தும் புரிந்து கொண்டிருக்குமா
தினம் சூழ்ந்து சிரித்து உடனிருக்கும்
ஒளியாண்டுகள் அப்பாற்பட்ட அவ்விண்மீன்கள்
என வினவி நோக்கினேன்
தனித்தே வளர்ந்து தேயும் அந்நிலவை..

பின்னிரவு கழியத்தொடங்கியதும்
அதனுடய முயற்பொந்தை நோக்கி விழுகிறது நிலவு!

என் ஒற்றுமை புரிந்ததா...
அது தனித்தில்லை என தெரிந்ததா...
அதன் பதிவேட்டில் அது என்ன புலம்பப்போகிறதோ என
வழக்கம் போல் பதில் தெரியாத
என் கேள்விக்கடல் அலைக்க... துயில் அழைக்க...
அடுத்த REM சுழற்சி வரை சற்று கண்ணயற்கிறேன் நான்...

No comments: