Tuesday, August 13, 2013

பின்னிரவு...

நித்திரை உலகில் துயரின்றி களித்திருக்க,
ஏதோ ஒரு REM சுழற்சிக் கனவொன்றின்
எதிர் பாரா எல்லை விளிம்பில்
விழ விரும்பாத அவ்வுலக முயற்பொந்தில்
சருக்கி விழுந்து இவ்வுலகம் வந்தடைந்த நான்,
படுக்கையில் படுத்தபடி, உருண்டு புரண்டு.. 
கண் மூடி கண் திறந்து,
போர்வையின் இடுக்கறியும் சில
கொசுக்களின் விளையாட்டுக்கு கைகொட்டி, 
யாரும் அகவலிடாது குறுந்தகவலிடாது
கண்மூடி அயர்ந்திருக்கும் என் அலைப்பேசியை அலசி
அந்த அடர்ந்த இருளில் கனத்த தனிமையில்
போர்த்தொடுத்துத் தோற்றுக்கொண்டிருந்தேன்
உறங்க விடாத அப்பின்னிரவோடும்
சில நிகழ்வுகளோடும்...

ஏன் அப்படி...இப்படி ஏனில்லை...
அவன் அவள் அவர் அவர்கள் நான்
அப்படி செய்ததேன் இப்படி ஏனில்லை
என் பிழையா... பிழை பெரிதா...
திருத்திக்கொள்ள முடியுமா தேவையா
என அடிமேல் அடி வைத்து சலனித்திருந்தேன்
மனதிலும்.. என் வீட்டு அறையிலும்...

முடிவு தென்படாத
அப்”பென்ரோஸ்” படியேற்றப் போரில்,
வெள்ளைக் கொடிகாட்டி
சற்று நிறுத்தம் செய்த,
சிறு சாளர துவாரமொன்றில்,
திரெளபதி சேலையாய்,
ஒளி கக்கி மிதந்திருக்கும் முழு மதியை,
ஒரே வானிலிருந்தும் புரிந்து கொண்டிருக்குமா
தினம் சூழ்ந்து சிரித்து உடனிருக்கும்
ஒளியாண்டுகள் அப்பாற்பட்ட அவ்விண்மீன்கள்
என வினவி நோக்கினேன்
தனித்தே வளர்ந்து தேயும் அந்நிலவை..

பின்னிரவு கழியத்தொடங்கியதும்
அதனுடய முயற்பொந்தை நோக்கி விழுகிறது நிலவு!

என் ஒற்றுமை புரிந்ததா...
அது தனித்தில்லை என தெரிந்ததா...
அதன் பதிவேட்டில் அது என்ன புலம்பப்போகிறதோ என
வழக்கம் போல் பதில் தெரியாத
என் கேள்விக்கடல் அலைக்க... துயில் அழைக்க...
அடுத்த REM சுழற்சி வரை சற்று கண்ணயற்கிறேன் நான்...

எவளோ ஒருத்தி!

அவ, யாரோ எவளோ ஒருத்தி
துடுக்கானப் பேச்சுக்காரி
பாக்கத் துரு துருன்னு
வண்டாட்டம் வளம் வருவா....
யேன் பேச்சுப் பழக்கமெல்லாம்
அச்சு அசப்பாக அவ தோழன்
போலிருக்குன்னு சொல்லி சிரிச்சு நின்னா..

பேச்சு அவ பேச்சு
நிக்காத காத்தாட்டம்...
சுடு காபி கையில் கொட்டி
சுட்ட கதை சொல்லி வைச்சா..
அவ பூனை மீசை முடி
நான் காட்ட கோவிச்சா...
கிண்டலாப் பேசி நான் 
வீணா வம்பிழுக்க, வந்த 
சிரிப்படக்கி உள்ளார வச்சுக்கிட்டு
மொறச்சா முழியிரண்டும் 
முட்டையா மாத்திப்புட்டு...
பொழப்பு கஷ்டமுன்னு
சொனங்கி நிக்கையிலே
தேத்தி அனுப்பி வச்சேன்
மனசார அவ சிரிச்சா..
பொழுதெல்லாம் பேசித் தீத்து 
ராப்போது ஆன போதும்
நில்லாம பேசிப் பேசி
யேன் தூக்கம் தள்ளி வச்சா...
நான் பேசாத நேரம் எல்லாம்
தனிமைனு மொகஞ்சுழிச்சா...

நட்பு முத்தி அந்த 
பழக்கத்தில் பல நாளு
அவ துயரம் நான் தொடச்சேன்
கண்ணீரு அத சேத்தி...
முகம் மட்டும் சிரிச்சவள
உண்மயா சிரிக்க வச்சேன்..
நட்பு உண்மையினு
அம்புட்டு நம்பி வச்சேன்...
கரை சேத்த தோணி அதை
கரையோட விட்டுப்புட்டா..
புயக்காத்து அடிக்கையில
ஆத்தோட போக விட்டா..
.
காத்து நிக்க வில்ல அவ
பேச்சு நின்னு போச்சு....
கடல் நீரு வத்தவில்ல
அவ பாசம் வத்திப்போச்சு
எல்லாம் முடிஞ்சிருக்க
எனக்குள்ள நான் பாத்தேன்...
முகம் பாக்கும் கண்ணாடிய
கழட்டி வச்ச வெறுஞ் சுவரா
உசிர் போயி அழிஞ்சிருக்கு
வெறுங்கூடா எம்மனசு...

கூடாக்கி விட்டவள,
முன்னிற்க நான் பாத்தேன்...
அடையாளம் தெரியவில்ல...
அவ, யாரோ எவளோ ஒருத்தி!!!

மாயக்கண்ணாடி

பரட்டைத் தலை, பரந்த நெற்றி, அப்போதுதான்
படுத்து எழுந்தது போல் உயிரற்ற பார்வை,
குடைமிளகாய் மூக்கு, தேங்காய் பற்கள்
அவற்றை மூட சிரமிக்கும் பேருதடுகளோடு
இருவார மீசை தாடி,
கருப்பு நிறம், நெடு நெடுவென எக்கச்சக்க உயரம்
என்றவாரியான இவன் உருவத்தின் பேரிலக்காரத்தை
அவள் உணர்த்தியது போல் ஆணித்தனமாக உணர்த்தத் தவறியது
அவன் ஒற்றை அறை வீட்டுச் சுவற்றின் தனிக்கண்ணாடி!

என்ன அழகாய்...

என்ன அழகாய் மிதித்து உதைத்து வாட்டி குத்தி கிழித்து,
நைந்த என் இதயத்தை வதைத்து கொண்டிருக்கிறாய், 
உடைத்து நையப் புடைத்து...
நானும் கொஞ்சமும் வலிக்காமல் ரசித்து கொண்டிருகிறேன்
உன்னையே, என் கண்கள் விரித்து...